"சரியான தருணத்தில் பனிப்பொழிவு இருந்தது மகிழ்ச்சி" - கேப்டன் ஷிகர் தவான்
|இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யரின் பார்ட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்ததாக ஷிகர் தவான் தெரிவித்தார்.
ராஞ்சி,
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இதில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
தோல்விக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜ் கூறுகையில், 'இந்த அளவுக்கு பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். போக போக ஆடுகளத்தன்மை மெதுவாக இருக்கும் (ஸ்லோ) என்று நினைத்தோம். ஆனால் 30-வது ஓவருக்கு பிறகு பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு எளிதாக மாறி விட்டது' என்றார்.
இந்திய கேப்டன் ஷிகர் தவான் கூறும் போது 'டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகராஜிக்கு நன்றி. சரியான தருணத்தில் பனிப்பொழிவு இருந்தது மகிழ்ச்சி அளித்தது. இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் அருமை. அவர்கள் உருவாக்கிய பார்ட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்தது' என்றார்.