டிராவிட் கூறிய வார்த்தைகள்தான் தன்னம்பிக்கை கொடுத்தது - சஞ்சு சாம்சன்
|ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனையடுத்து ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது அவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும், ஆலோசகராகவும் பெரும் பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு ராகுல் டிராவிட் சொன்ன வார்த்தைகள்தான் தம்மை இந்தளவுக்கு முன்னேற உதவியதாக ராஜஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"ராஜஸ்தான் அணிக்கு வருவதற்கு சில முன்பாக ஜெய்ப்பூரில் அந்த அணியின் முன்னோட்ட முகாம் நடைபெற்றது. அதற்கு என்னை ஸ்ரீசாந்த் பாய் அழைத்துச் சென்றார். அங்கே ராகுல் சார், பேடி அப்டோன் ஆகியோர் இருந்தனர். அதற்கு முன்பாக நான் கொல்கத்தா அணியின் முன்னோட்ட முகாமிற்கு சென்றேன். அங்கே பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் ராஜஸ்தான் அணியில் எனக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது. குறிப்பாக அங்கு என்ன நடக்கும்? எம்மாதிரியான வீரர்களை ராஜஸ்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.
அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் முகாமில் 2 நாட்கள் பங்கேற்றேன். அன்றைய நாளில் என்னுடைய ஆட்டத்தை பார்த்து விட்டு 'நீங்கள் ஏதோ சிறப்பாக செய்கிறீர்கள் எங்களுடைய அணிக்காக விளையாடுகிறீர்களா?' என்று ராகுல் டிராவிட் கூறினார். அவருடைய வார்த்தைகள் எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் லெஜெண்ட். அவரைப் போன்ற ஒருவர் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்கு போதுமானதாக இருக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக நான் போதுமானதாக இருப்பேன்" எனக் கூறினார்.