முதல் போட்டியில் சந்தித்த மோசமான தோல்விக்கு பின் இது உண்மையாக நல்ல செயல்பாடாகும் - ஜோஸ் பட்லர்
|13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
தர்மசாலா,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதன் பின் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியதாவது,
முதல் போட்டியில் சந்தித்த மோசமான தோல்விக்கு பின் இது உண்மையாக நல்ல செயல்பாடாகும். இருப்பினும் கடைசி நேரத்தில் நாங்கள் இன்னும் சற்று பார்ட்னர்ஷிப் போட்டு அதிக ரன்களை அடித்திருக்க வேண்டும். அதே சமயம் முதல் போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு பின் இப்போட்டியில் டேவிட் மாலன் சதமடித்ததை பார்க்க சிறப்பாக இருந்தது.
இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை சரியாக படிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும் எங்களிடம் வேகம், சுழல் என அனைத்திற்கும் தகுந்த சமநிலை நிறைந்த அணி இருக்கிறது. இன்று ரீஸ் டாப்லி எங்களுக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.