< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதனை மாற்ற வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதனை மாற்ற வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை

தினத்தந்தி
|
20 Aug 2024 12:46 AM IST

ஆஸ்திரேலியா இம்முறை இந்தியாவை பழி தீர்க்க காத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

ஏனெனில் காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19ஆம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரின் முதல் போட்டி பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் 36 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் அபார கம்பேக் கொடுத்த இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

இம்முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு நகரில் இந்தியா பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு தயாராக உதவும் வகையில் நவம்பர் 30 - டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கான்பெராவில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் 2 நாட்கள் கொண்ட பகலிரவு பயிற்சி போட்டியில் இந்தியா விளையாடும் என்று அந்நாட்டு வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 2 தோல்விகளுக்காக ஆஸ்திரேலியா இம்முறை இந்தியாவை பழி தீர்ப்பதற்காக காத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியினர் கூர்மையாக விளையாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டி வெறும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதை பி.சி.சி.ஐ. 3 நாட்களாக மாற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பொதுவாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வெளிநாட்டு அணிகளுடன் பிரதமர் லெவன் அணி விளையாடும் பயிற்சி போட்டி 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே நாம் நம்முடைய சீனியர் வீரர்களை அப்போட்டியில் விளையாட அனுப்பக்கூடாது. நமது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அனைத்திற்கும் மேலாக அங்கே நாம் விளையாட செல்கிறோம். ஓய்வெடுப்பதற்காக அல்ல.

ஆஸ்திரேலியர்கள் பழி தீர்ப்பதற்கான தாகத்துடன் உள்ளனர். எனவே இம்முறை அங்கே இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற கூர்மையுடன் செயல்பட வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியனுக்கு எதிராக அனுபவமற்ற வீரர்கள் அசத்துவதற்காக அந்த பயிற்சி போட்டியை 3 நாட்களாக மாற்ற இன்னும் நேரம் உள்ளது. கமான் பிசிசிஐ, உங்களால் அது முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்