கண்டிப்பாக அதனை சரி செய்ய வேண்டும் - இந்திய அணியின் துணை பயிற்சியாளர் பேட்டி
|அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது ஏமாற்றமளிப்பதாக அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கண்ட போதிலும் மிடில் ஓவர்களில் வரிசையாக விக்கெட்டுகளை தாரை வார்த்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அதைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களுடன் பேசி முன்னேற்றத்தை காண்போம் என்று தெரிவிக்கும் அவர் தோல்விக்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு:-
" நீங்கள் இது அதிர்ச்சி என்று கேட்டால்? நான் ஆம் என்றுதான் கூறுவேன். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு இங்கே அதிக ஆதரவு கிடைத்தது. கடந்த 2 போட்டிகளிலும் புதிய பந்துக்கு எதிராக அடிக்க முடிந்தது. ஆனால் பந்து பழையதாகும்போது 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வது கடினமாக மாறியது. சில நேரங்களில் குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்ற கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்.
எனவே நாங்கள் மீண்டும் சென்று அடுத்தடுத்த போட்டிகளில் ஏன் இப்படி நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு கண்டிப்பாக எங்களை சரி செய்ய வேண்டும். கடந்த போட்டியில் எங்களால் சிறிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. ஆனால் இன்று மொத்தமாக விக்கெட்டுகளை இழந்தோம். இலங்கை நன்றாக பந்து வீசியது. வாண்டர்சே சரியான லென்த்தை வீசினார். எனவே நீங்கள் இலங்கைக்கு கொஞ்சம் அதிக பாராட்டு கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.