கிரிக்கெட் வரலாற்றிலேயே அவரைப் போன்ற வீரரை பார்ப்பது அரிதான விஷயம் - சயீத் அஜ்மல் பாராட்டு
|தான் விளையாடியதிலேயே நல்ல கிரிக்கெட்டர் என்றால் அது சச்சின்தான் என்று சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல். இவர் விளையாடிய கால கட்டங்களில் பாகிஸ்தான் அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தரமான சுழற்பந்து வீச்சாளராக இருந்த அவரது பவுலிங் ஆக்சன் மீது சில சர்ச்சைகள் இருந்ததால் அவர் பாகிஸ்தான அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார்.
இந்நிலையில் தான் விளையாடியதிலேயே நல்ல கிரிக்கெட்டர் என்றால் அது சச்சின்தான் என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கிரிக்கெட் வரலாற்றிலேயே சச்சின் டெண்டுல்கரை போன்ற ஜாம்பவான் வீரரை பார்ப்பது அரிதான விஷயம். உலகிலேயே நல்ல குணம் கொண்ட ஒரு மனிதரும் அவர்தான். எனவேதான் நான் அவரை எப்போதும் சார் என்று அழைப்பேன். அவர் அந்த வார்த்தைக்கு தகுதியான ஒரு வீரர் அவர்தான் என்பதையும் நான் நம்புகிறேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் அவரது விக்கெட்டை வீழ்த்தியதை நான் மறக்கவே மாட்டேன். அந்த நினைவுகளை பசுமையாக இன்றும் வைத்திருக்கிறேன். அதேபோன்று நான் அவருடன் சேர்ந்து ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறேன். அப்போது அவர் எனக்கு கேப்டனாக இருந்து என்னை ஆதரித்து சிறப்பாக செயல்பட வைத்தார்" என்று கூறினார்.