சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல...இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை - உண்மையை உடைத்த பாக். முன்னாள் கேப்டன்
|சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை என பாக். முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் விராட் கோலி சதம் மற்றும் இஷன் கிஷனின் இரட்டை சதத்தால் இந்திய அணி 409 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இஷன் கிஷன் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 72வது சதத்தை அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை(71 சதம் ) பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார். இந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
இன்னும் சில ஆண்டுகள் விராட் கோலி ஆடினால் மேலும் சதங்களை அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்திய அணிக்கு தற்போது அது தேவையில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சதங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான நேரம் இல்லை. அது தேவையும் இல்லை. அவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும். இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. கோலி 100 சதங்கள் அடித்தாலும், 200 சதங்கள் அடித்தாலும் அது பெரிய விஷயமல்ல.
இந்திய கிரிக்கெட்டும், ரசிகர்களுக்கும் தற்போது ஐசிசி பட்டம் தான் தேவை. நிதி ரீதியாக பார்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் ஆகியவை முன்னிலையில் உள்ளன. ஆனால் அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களிடம் இருந்து சாம்பியன் பட்டம் வேண்டும் என்ற மிகப்பெரிய அழுத்தங்கள் வருகின்றன.
கோலி விரும்பினால் 100 சதங்கள் அடிக்கலாம், ஆனால் அது தேவையில்லை. ஆசிய கோப்பையும் போய்விட்டது, அதே போல் சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை, மேலும் கடந்த இரு டி20 உலகக்கோப்பை தொடர்கள் எதிலும் இந்திய அணி பட்டம் வெல்ல வில்லை.
100 சதம் என்ற சாதனை அவருக்கு சொந்தமனாது, ஆனால் இந்தியாவுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தற்போது சாம்பியன் பட்டம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.