அவர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டியது முக்கியமானதாகும் - கம்பீர்
|இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோர் மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி வருகிற 27, 28, 30-ந் தேதிகளில் பல்லகெலேவிலும், ஒருநாள் போட்டி ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்பிலும் நடக்கிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோர் மும்பையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பேட்டியளித்த கம்பீர் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில் தொடர்ந்து விளையாட முடிந்தால், நல்ல பார்மில் இருந்தால் எல்லா போட்டிகளிலும் ஆடலாம். ரோகித் சர்மா, விராட்கோலி 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடுவார்கள். எனவே அவர்கள் இனிமேல் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டியது முக்கியமானதாகும். பும்ரா போன்ற பவுலர்களுக்கு போதிய ஓய்வளித்து முக்கியமான போட்டிக்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். பும்ரா மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை சிறப்பாக கையாள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.