< Back
கிரிக்கெட்
தோனியுடன் இணைந்து விளையாடப்போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது- ரச்சின் ரவீந்திரா
கிரிக்கெட்

தோனியுடன் இணைந்து விளையாடப்போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது- ரச்சின் ரவீந்திரா

தினத்தந்தி
|
20 Dec 2023 2:09 PM IST

ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

துபாய்,

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் நேற்று நடந்தது.

ஏலப்பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார். .

7½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள். இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய நியூசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 1. 80 கோடிக்கு எடுத்தது. ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஏலத்தில் எடுத்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியில் சேர்ந்தது குறித்தும் தோனியுடன் இணைந்து விளையாடபோவது குறித்தும் ரச்சின் ரவீந்திரா கூறுகையில், 'முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜா போன்ற தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடப்போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள், மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் நானும் சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்