உலகத்தில் என் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன் - கார் விபத்து குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்
|இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2022ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக செயல்பட்டவர் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். சொந்த ஊரான உத்தரகாண்ட்டின் ரூர்கிக்கு தனது சொகுசு காரில் சென்ற ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டின் கால், தலை உள்பட உடலின் பல பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டன. பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பண்ட் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
விபத்துக்கு பின்னர் ரிஷப் பண்ட் இதுவரை இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமடையமல் இருந்ததால் அவர் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை. ஆனால், தற்போது குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு நடந்த கார் விபத்து குறித்து ரிஷப் பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பண்ட் கூறுகையில்,
என் வாழ்வில் முதல்முறையாக இந்த உலகில் என் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்தேன். விபத்தின்போது காயம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியும். விபத்தில் மிகவும் தீவிரமான காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் ஆனால் என் அதிர்ஷ்டத்தால் காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. விபத்தின்போது என்னை யாரோ காப்பாற்றினார்கள் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. காயங்களில் இருந்து குணமடைந்து மீண்டுவர எவ்வளவு நாட்கள் ஆகும் என நான் டாக்டரிடம் கேட்டேன். 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என டாக்டர் கூறினார். விரைவில் குணமடைய நான் நிறைய உழைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்' என்றார்.