< Back
கிரிக்கெட்
கேப்டனாக களமிறங்கும் இஷான் கிஷன்... எந்த அணிக்காக தெரியுமா..?

image courtesy: AFP

கிரிக்கெட்

கேப்டனாக களமிறங்கும் இஷான் கிஷன்... எந்த அணிக்காக தெரியுமா..?

தினத்தந்தி
|
13 Aug 2024 6:10 PM IST

இந்திய அணியில் மீண்டும் விளையாட இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காந்திநகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன இஷான் கிஷன், வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தவர். அதே போல ஐபிஎல் தொடரிலும் ஓரளவு நன்றாக செயல்பட்ட அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய அவர் கடைசியாக 2023 தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் அந்த தொடரின்போது ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இஷான் கிஷன் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டார். அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக அந்த தொடரிலிருந்து விடுப்பு கொடுத்தது. ஆனால் அந்த விடுப்பில் இஷான் கிஷன் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார். அதன்பின் அவர் அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரங்கட்டப்பட்டார்.

மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்டு இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக இஷான் கிஷன் ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை செய்யாத இஷான் கிஷன், ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார். அதனால் கோபமடைந்த பி.சி.சி.ஐ. 2023 - 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அவரை அதிரடியாக நீக்கியது.

இதனிடையே ஐபிஎல் தொடரிலும் அவர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . அதனால் டி20 உலகக்கோப்பை, சமீபத்திய ஜிம்பாப்வே, இலங்கை தொடர்களில் இஷான் கிஷன் மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.

அதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் விளையாட இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக விளையாட இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்