வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்தார் விராட் கோலி..
|மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார்.
டாக்கா,
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி 'திரில்' வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது.
இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியினருடன் இணைந்துள்ளார்.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்தபோட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார்.
இஷான் கிஷன் அதிரடியை கட்டுப்படுத்த வங்காளதேச பந்துவீச்சாளர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை வெறும் 126 பந்துகளில் அடுத்துள்ளார்.
இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டைசதமாகும். அவர் 131 பந்துகளில் 24 பவுண்டரி, 10 சிக்சருடன் 210 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி அவுட்டானார்.
இந்தியாவில் சச்சின், சேவாக், ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக இஷான் கிஷன் இரட்டை சதமடித்து புதிய சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினார். அவர் சர்வதேச அளவில் 72 சதம் அடித்து அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணி 45 ஓவர்களில் 359 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.