< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான தோல்விக்கு ஐ.பி.எல்.தான் காரணமா..? ரோகித் சர்மா பதில்
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான தோல்விக்கு ஐ.பி.எல்.தான் காரணமா..? ரோகித் சர்மா பதில்

தினத்தந்தி
|
9 Aug 2024 8:36 AM IST

ஐ.பி.எல். தொடரை வைத்து இந்திய அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

கொழும்பு,

இலங்கை அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் இருதரப்பு தொடரில் தோற்காமல் இருந்து வந்த மாபெரும் சாதனையை இந்தியா தவறவிட்டது.

சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ளாத இந்திய பேட்ஸ்மேன்கள் வரலாற்றுத் தோல்விக்கு முக்கிய காரணமானார்கள். குறிப்பாக முதல் போட்டியில் 231 ரன்களை அடிக்க முடியாமல் சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் 3வது போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா 249 ரன்களை அடிக்க முடியாமல் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதனால் ஐ.பி.எல். தொடரில் பிளாட்டான பிட்ச்களில் விளையாடிப் பழகி விட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் சந்தித்த தோல்விக்கு ஐ.பி.எல். காரணமல்ல என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரை வைத்து இந்திய அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். அதே சமயம் இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளூர் தொடர்களில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு:- "எங்கள் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாட எப்போதும் தயாராக இருப்பார்கள் என்பதை உறுதி செய்வதே எங்களுடைய இலக்காகும். எங்களுடைய சர்வதேச கிரிக்கெட்டுக்கு உள்ளூர் போட்டிகள்தான் முதுகெலும்பாக இருக்கின்றன. நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பின்பே எங்கள் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர். எனவே உள்ளூர் கிரிக்கெட் போட்டி மிகுந்ததாக இருக்க வேண்டும். நாங்கள் பெரும்பாலான வீரர்களை உள்ளூர் தொடர்களில் இருந்தே தேர்ந்தெடுக்கிறோம்.

ஐ.பி.எல். தொடரிலிருந்து அல்ல. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரஞ்சிக்கோப்பை, ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விஜய் ஹசாரே, டி20 கிரிக்கெட்டுக்கு சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து தான் தேர்ந்தெடுக்கிறோம். அதே சமயம் ஐ.பி.எல். தொடரும் எங்களுடைய கிரிக்கெட்டாகும். எனவே நாளின் இறுதியில் அந்த அனைத்து தொடர்களிலும் அசத்தும் வீரர்களே இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுகின்றனர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்