ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப் யாதவ்...? - வெளியான தகவல்
|20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 4 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பண்ட் தலைமையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி அணி பந்துவீச்சில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது.
இந்நிலையில் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக தற்போது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இடம் பெறாத குல்தீப் யாதவ் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருடைய காயம் தற்போது வீரியம் அடைந்துள்ளதால் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் ஜூன் 1ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை கருத்தில் கொண்டு குல்தீப் யாதவ் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.