டெஸ்ட் போட்டியில் கூட அவர் கேப்டனாக இருக்க தகுதி இல்லையா..? இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
|துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துலீப் கோப்பையில் இந்தியாவின் முதன்மை டெஸ்ட் வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதற்கு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் அபிமன்யு ஈஸ்வரன் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் அவர் விளையாட உள்ளது பரவாயில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் பெறக்கூடிய ஒரு வீரராக இல்லையா? அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் சிறந்த வீரராக செயல்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர்தான் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த ஒரே விக்கெட் கீப்பர். வேறு யாரும் அதைச் செய்ததில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். எனவே என்னுடைய பார்வையில் அவர் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு தகுதியானவர். இருப்பினும் சுப்மன் கில், ருதுராஜ், ஸ்ரேயாஸ், அபிமன்யு ஆகியோர் கேப்டன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய சகாப்தம் துவங்கியுள்ளது. எனவே ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவது பற்றி கம்பீர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனெனில் சமீபத்திய இலங்கை ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. 3வது போட்டியில்தான் ராகுலுக்கு பதில் களமிறங்கினார்" என்று கூறினார்.