டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் குறித்து தனது கருத்தை தெரிவித்த இர்பான் பதான்!
|வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலர்களுக்கு எதிராகவும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் கவரும் வகையில் இருக்கிறது.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- "டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நான் ஜிதேஷ் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். ஜிதேஷ் சற்று சூர்யகுமார் யாதவ் போன்ற புதுமையான பிளேயர். அவர் லேப் ஷாட்டுகள் அடிப்பதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒன்றரை வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி நன்றாக இருக்கிறது. சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அவர் பஞ்சாப் அணிக்காக பினிஷிங் வேலையை சிறப்பாக செய்தார். வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலர்களுக்கு எதிராகவும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் கவரும் வகையில் இருக்கிறது" என்று கூறினார்.