ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்
|மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை குவாலியரில் நடக்கிறது.
கொல்கத்தா,
இரானி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு ரஞ்சி சாம்பியன் அணி, இதர இந்தியா அணியுடன் (ரெஸ்ட் ஆப் இந்தியா) மோதுவது வழக்கம். 2021-22-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற மத்தியபிரதேச அணிக்கு அப்போது இரானி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. ஏனெனில் அந்த சமயம் கொரோனா தாக்கத்தால் முந்தைய சீசனில் ஆட வேண்டிய சவுராஷ்டிராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இந்த முறை மத்திய பிரதேச அணிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்தியபிரதேசம்- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை குவாலியரில் நடக்கிறது. இதற்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்த உள்ளார். இவர் தான் அண்மையில் முடிந்த ரஞ்சி தொடரில் அதிக ரன் (9 ஆட்டத்தில் 990 ரன்) குவித்தவர் ஆவார். அதே சமயம் மும்பை வீரர் சர்ப்ராஸ் கானுக்கு உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடிய போது கை நடுவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 10 நாட்கள் வரை ஓய்வில் இருக்கும்படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் இரானி கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகியுள்ளார்.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:-
மயங்க் அகர்வால் (கேப்டன்), சுதிப்குமார் காரமி, ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஹர்விக் தேசாய், முகேஷ் குமார், அதித் சேத், சேத்தன் சகாரியா, நவ்தீப் சைனி, உபேந்திர யாதவ், மயங்க் மார்கண்டே, சவுரப் குமார், ஆகாஷ் தீப், பாபா இந்திரஜித், புல்கித் நரங், யாஷ் துல்.
மத்திய பிரதேச அணி விக்கெட் கீப்பர் ஹிமன்ஷூ மந்திரி தலைமையில் களம் காணுகிறது. ரஜத் படிதார், வெங்கடேஷ் அய்யர், அவேஷ்கான் உள்ளிட்டோரும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.