இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா அபாரம் - சர்ப்ராஸ் கான் சதம் அடித்து அசத்தல்
|முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்,
இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியா-சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆட களம் இறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் பேட்ஸ்மன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் வசவாடா (22 ரன்), கேப்டன் உனத்கட் (12 ரன்), ஜடேஜா (28 ரன்), சேத்தன் சக்காரியா (13) ஆகியோர் தவிர அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். முடிவில் சவுராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 98 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் அபிமன்யு ஈஸ்வரன் (0), மயங்க் அகர்வால் (11 ரன்), யாஷ் துல் (5 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
4வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் விஹாரி மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது மட்டுமின்றி அடித்து ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் சர்ப்ராஸ் கான் சதமும், விஹாரி அரைசதமும் அடித்தன்ர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.