கிரிக்கெட்
இரானி கோப்பை 2024: முதல் மும்பை வீரராக வரலாற்று சாதனை படைத்த சர்பராஸ் கான்

Image Courtesy: @BCCIdomestic

கிரிக்கெட்

இரானி கோப்பை 2024: முதல் மும்பை வீரராக வரலாற்று சாதனை படைத்த சர்பராஸ் கான்

தினத்தந்தி
|
2 Oct 2024 7:18 PM IST

மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.

லக்னோ,

மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை தரப்பில் ரகானே 86 ரன் (197 பந்துகள்), சர்பராஸ் கான் 54 ரன் (88 பந்துகள்) எடுத்து களத்தில் இருந்தனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை தொடர்ந்து பேட்டிங் செய்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னிலும் அடுத்து வந்த ஷாம்ஸ் முலானி 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து சர்பராஸ் கானுடன், தனுஷ் கோட்யான் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் தனுஷ் கோட்யான் அரைசதம் அடித்த நிலையில் 64 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மோஹித் அவஸ்தி ரன் எடுக்காமலும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 138 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 536 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை தரப்பில் சர்பராஸ் கான் 221 ரன்னுடனும், எம் ஜூனேட் கான் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இரானி கோப்பை வரலாற்றில் முதல் மும்பை வீரராக சர்பராஸ் கான் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை சர்பராஸ் கான் படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்