ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுல், நிகோலஸ் பூரன் அரைசதம் அடித்தும் பலன் இல்லை. ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த குயின்டான் டி காக், தேவ்தத் படிக்கல் ரன் குவிக்கும் முனைப்புடன் உள்ளனர்.
பந்துவீச்சில் குருணல் பாண்ட்யா (4 ஓவரில் 19 ரன்) தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர். முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிக்கணக்கை தொடங்கும் வேட்கையுடன் லக்னோ தயாராகி வருகிறது.
தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தெறிக்கவிட்ட பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. அந்த அணியில் கேப்டன் தவான், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் நல்ல நிலையில் உள்ளனர். உள்ளூர் சூழல் லக்னோவுக்கு சாதகமாக இருந்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போட பஞ்சாப் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.