ஐ.பி.எல்.: வெற்றி கணக்கை தொடருமா பெங்களூரு..? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
தர்மசாலா,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விடும். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.
இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.
அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.