ஐ.பி.எல்: 2-வது வெற்றி யாருக்கு? சென்னை - குஜராத் அணிகள் இன்று மோதல்
|5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது.
சென்னை,
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 174 ரன் இலக்கை 8 பந்துகள் மீதம் வைத்து சென்னை அணி எட்டிப்பிடித்து அசத்தியது.
சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபேவும், பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜாவும் நல்ல நிலையில் உள்ளனர். பெங்களூருவுக்கு எதிராக விக்கெட் இன்றி 47 ரன்கள் கசிய விட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே முன்னேற்றம் கண்டால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும். தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.
உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
இதேபோல் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மொகித் ஷர்மாவும் வலுசேர்க்கிறார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியில் அங்கம் வகிப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
2-வது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 2 மோதலிலும் (கடந்த ஆண்டு இறுதிப்போட்டி, முதலாவது தகுதி சுற்று) சென்னை அணியே வென்றுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
சென்னையில் நடைபெறும் 2-வது ஆட்டம் இதுவாகும். இங்கு கடந்த 22-ந் தேதி நடந்த தொடக்க லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இதேபோல் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் இந்த ஆட்டத்திலும் ரசிர்கர்களின் ஆர்ப்பரிப்பும், ஆதரவும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கும் எனலாம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.