ஐ.பி.எல்.: வெற்றிக் கணக்கை தொடங்குவது யார்..? ஐதராபாத் - மும்பை அணிகள் இன்று மோதல்
|ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் 209 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா (தலா 32 ரன்) ஆகியோர் அமைத்த நல்ல அடித்தளத்தாலும், கிளாசெனின் (29 பந்தில் 63 ரன்) வாணவேடிக்கையாலும் நெருங்கி வந்து (204 ரன்) வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
கடைசி ஓவரில் ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். பந்து வீச்சில் நடராஜன், மயங்க் மார்கண்டே, கம்மின்ஸ் நல்ல நிலையில் உள்ளனர், யான்சென், புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது ஏற்றம் கண்டால் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. 169 ரன் இலக்கை விரட்டிய மும்பை அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா (43 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (46 ரன்) தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.
பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ, பியுஷ் சாவ்லா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி கலக்கினர். ஆனால் ஹர்திக் பாண்ட்யா, லுக் வுட் பந்து வீச்சு எடுபடவில்லை. தொடக்க ஓவரை வீசும் வாய்ப்பை பும்ராவுக்கு வழங்காமல் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியதும், அத்துடன் அவர் 7-வது வரிசையில் பேட்டிங் செய்ததும் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். எனவே மும்பை அணி இந்த ஆட்டத்தில் தனது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் வியூகத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.