< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? முதலாவது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? முதலாவது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
24 May 2022 5:42 AM IST

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் 5 முதல் 10 இடங்களை பெற்றன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இதில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

அறிமுக அணியான குஜராத் 14 லீக் ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி 4 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடித்து வைத்தது. குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் ரஷித் கான், முகமது ஷமி, பெர்குசன், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப்பும் நல்ல நிலையில் உள்ளனர். ரஷித் கான் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கில் அதிரடி காட்டுவதும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்குடன் பந்து வீச்சிலும் பங்களிப்பதும் அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். அத்துடன் முகமது ஷமி பவர்பிளேயில் இதுவரை 11 விக்கெட்டுகள் சாய்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருக்கிறார்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை தனதாக்கி பிளே-ஆப் சுற்றை எட்டியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 3 சதம், 3 அரைசதம் உள்பட 629 ரன்கள் எடுத்து இந்த சீசனில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். இதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ஜெய்ஸ்வாலும், பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின், ஒபெட் மெக்காயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் கடந்த 5 ஆட்டங்களில் அரைசதம் அடிக்கவில்லை. குறிப்பாக முந்தைய 3 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அந்த அணியின் ஸ்கோர் வலுவான நிலையை எட்ட அவரது ஆட்டம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். தனது பார்ம் குறித்து ஜோஸ் பட்லர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த போட்டி தொடரில் முதல் பாதியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது. கடந்த சில ஆட்டங்கள் எனக்கு லேசான ஏமாற்றம் அளித்தது. இருப்பினும் பிளே-ஆப் சுற்றில் நன்றாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

ராஜஸ்தானுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைய ராஜஸ்தான் அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், லோக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஆர்.அஸ்வின், ஹெட்மயர், ரியான் பராக், டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்