ஐ.பி.எல்.: 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? பெங்களூரு - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன் இலக்கை பெங்களூரு அணி எட்டுவதற்கு விராட் கோலியின் அசத்தலான அரைசதம் அடித்தளமாக அமைந்தது என்றால், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரின் அதிரடி வெற்றிக்கு வித்திட்டது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பேட்டிங்கில் பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் , ரிங்கு சிங், பந்து வீச்சில் சுனில் நரின், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் 2-வது வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.