ஐ.பி.எல்.: பொறுத்திருந்து பாருங்கள் அந்த அணிதான் கோப்பையை வெல்லும் - டி வில்லியர்ஸ்
|இன்று தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
சென்னை,
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முன்னதாக நிறைவு பெற்ற மகளிர் ஐபிஎல் 2024 தொடரில் ஸ்மிருத்தி மந்தனா தலைமையில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு சாதனை படைத்தது. எனவே அந்த உத்வேகத்துடன் ஆண்கள் அணியும் இம்முறை கோப்பையை வெல்லும் என்று ஆர்.சி.பி. ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வருடம் மகளிர் அணி கோப்பையை வென்றதுபோல் ஆண்கள் அணியும் கோப்பையை வெல்வது விதியாக இருக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இந்த வருடம் ஐ.பி.எல். கோப்பையை ஆர்.சி.பி. அணி வெல்வதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
" இதுவே அந்த வருடம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ( ஐ.பி.எல். கோப்பை) வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்து பாருங்கள். விளையாட்டு ஒரு வேடிக்கையான விஷயம். இது கணிக்க முடியாதது. ஆண்கள் ஆர்.சி.பி. அணி ஒருமுறை கோப்பையை வென்றால் இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும்.
இதே தொடரில் 9 சூப்பர் அணிகள் இருக்கின்றன. அதில் ஆர்.சி.பி. அணியை தவிர்த்து மேலும் சில அணிகளும் கோப்பையை வெல்லாமல் இருக்கின்றன. அவர்களும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். நாங்களும் கடந்த காலங்களில் சிறந்த முயற்சியை கொடுத்தோம். இருப்பினும் 3 முறை நெருங்கியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதைத் தவற விட்டற்காக எங்களையே குறை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.