ஐ.பி.எல். ஏலத்தை நடத்தும் முதல் பெண்..!
|16 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் ஏல நிகழ்ச்சியை ஒரு பெண் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
துபாய்,
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. வீரர்கள் பரிமாற்றத்தில் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து மும்பைக்கும், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கும் தாவியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த நிலையில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் வெளிநாட்டில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற உள்ளது. வழக்கமாக ஐ.பி.எல். ஏலத்தை நடத்தும் இங்கிலாந்தின் ஹக் எட்மீட்ஸ்க்கு பதிலாக இந்த முறை மல்லிகா சாகர் ஏலத்தை நடத்த உள்ளார். மும்பையைச் சேர்ந்த மல்லிகா ஏற்கனவே புரோ கபடி லீக் மற்றும் பெண்கள் ஐ.பி.எல். ஏலத்தை நடத்திய அனுபவசாலி. 16 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் ஏல நிகழ்ச்சியை ஒரு பெண் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.