ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு முதல் வீரராக ...வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
ஜெய்ப்பூர்,
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் ஓராண்டுக்கு பிறகு தற்போது ஐ.பி.எல். தொடரின் மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வேளையில் இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பண்ட் நிகழ்த்தி உள்ளார்.