ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட தயார்... காயத்தில் இருந்து மீண்ட தீபக் சாஹர் பேட்டி
|ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயதான தீபக் சாஹர் இந்திய அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயதான தீபக் சாஹர் இந்திய அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாடவில்லை. ரூ.14 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் இல்லாதது சென்னை அணியின் பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அத்துடன் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் அவர் விலக நேரிட்டது. தற்போது முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், ஷிவம் மாவி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களின் வருகையால் இந்திய அணியில் தீபக் சாஹருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள 30 வயதான தீபக் சாஹர் மார்ச் 31-ந்தேதி தொடங்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் களம் இறங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உடல்தகுதியை எட்டுவதற்காக கடந்த 2-3 மாதங்கள் கடுமையாக உழைத்தேன். இப்போது முழு உடல்தகுதியுடன், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு நன்றாக தயாராகி வருகிறேன். முதுகில் காயம், தொடையில் தசைநாரில் கிழிவு என்று இரண்டு விதமான காயங்களால் அவதிப்பட்டேன். இரண்டுமே மிகப்பெரிய காயங்கள். இதனால் மாதக்கணக்கில் விளையாட முடியாமல் போய் விட்டது. எந்த வீரரும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பும் போது, பழைய நிலையை எட்டுவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
சிக்கலான காயம்
நான் ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருந்தால், முன்பே அணிக்கு திரும்பியிருப்பேன். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளராக முதுகில் அழுத்தத்தினால் எலும்பில் விரிசல் ஏற்படும் போது, மறுபடியும் அணிக்கு திரும்புவது மிகவும் கடினமான விஷயம். இத்தகைய முதுகு காயத்தால் நிறைய வீரர்கள் தடுமாறுவதை பார்த்து இருக்கிறோம்.
அணியில் யார் விளையாடுகிறார்கள், யார் விளையாடவில்லை என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை முழு உடல்தகுதியுடன் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுகிறேன். இதை நான் செய்தால், அணியில் எனக்குரிய வாய்ப்பு கிட்டும்.
ஐ.பி.எல்., ஆண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டிலும் இது நடக்கப்போகிறது. பெண்களுக்கான கிரிக்கெட் மிக வேகமாக வளர்வதுடன், தங்களது வாழ்க்கையில் வெகு சீக்கிரமாகவே சர்வதேச வீராங்கனைகளை சந்திக்கும் நிலை உருவாகும். அத்துடன் இது நிறைய வீராங்கனைகளின் வருவாய்க்கு உதவுவதுடன், போட்டியை விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்றும்.
இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயதான தீபக் சாஹர் இந்திய அணிக்காக 13 ஒரு நாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.