ஐ.பி.எல்.: ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்ல ஒரே வழி அதுதான் - மனோஜ் திவாரி
|நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு,
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 31 லீக் போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் முறையே தலா 8 புள்ளிகளுடன் 2 முதல் 4 இடங்களில் உள்ளன.
ஐ.பி.எல். தொடரில் சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்து 3-வது பெரிய அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 16 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஆனால் நடப்பு சீசனில் கோப்பையை கைப்பற்றி மோசமான வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நடப்பு சீசனில் ஆர்.சி.பி. அணி விளையாடியுள்ள முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதன் காரணமாக ஆர்.சி.பி. அணியின் பிளே ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் கிட்டதட்ட ஆர்.சி.பி. அணியின் கோப்பை கனவு கலைந்து விட்டது.
இந்நிலையில் ஆர்சிபி அணி சந்தித்து வரும் படுதோல்விகள் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி கூறுகையில்: " ஆர்.சி.பி அணி வெற்றி பெற வேண்டுமெனில் கேப்டன் முதல் கடைசி வீரர் வரை என ஒட்டுமொத்த அணியை சேர்ந்த அனைவரையும் மாற்றி விட்டு புது அணியாக கட்டமைக்க வேண்டும். இனி ஆர்சிபி அணி இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடையாது. அதேபோல இனி வரும் சீசன்களிலும் அவர்கள் தகுதி பெறும் வாய்ப்பு குறைவுதான். எனவே ஆர்.சி.பி அணியில் உள்ள அனைவரையும் தூக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அணியை கொண்டு வந்தால் மட்டுமே அவர்களால் ஐ.பி.எல். தொடரில் கோப்பையை கைப்பற்ற முடியும்" என்று கூறினார்.