ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
|நாளை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் நாளை மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சனும், லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.
தங்களது தொடக்க ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
கடந்த ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக செய்ல்பட்ட ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாண்ட்யா விலகியதை அடுத்து குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரரான சுப்மன் கில் செயல்பட உள்ளார். இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.