< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்: மும்பை அணியின் போராட்டம் வீண்... குஜராத் வெற்றி
கிரிக்கெட்

ஐ.பி.எல்: மும்பை அணியின் போராட்டம் வீண்... குஜராத் வெற்றி

தினத்தந்தி
|
24 March 2024 11:22 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் சஹா 19 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 31 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சனுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஓமர்சாய் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மில்லர் 12 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 45 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ரோகித் 43 ரன்களும், நமன் 20 ரன்களும், ப்ரவிஸ் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மும்பை அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டத்தில் மும்பை அணி ஒருசில விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஹர்திக், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3வது பந்தை சிக்சருக்காக தூக்கி அடித்த பாண்ட்யா, எல்லைக்கோடு அருகே கேட்ச்சாகி அவுட்டானார்.

முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மேலும் செய்திகள்