ஐ.பி.எல்: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்
|வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வரிசையாக தோல்வியை தழுவியது. வான்கடேவில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் முறையே 29 ரன் வித்தியாசத்தில் டெல்லியையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும் அடுத்தடுத்து வீழ்த்தி சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி சொந்த மண்ணில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவையும், 63 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும் தோற்கடித்தது. வெளியூரில் நடந்த அடுத்த 2 ஆட்டங்களில் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்திடமும் அடுத்தடுத்து பணிந்தது. உள்ளூரில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை பதம் பார்த்தது.
பலம் பொருந்திய சென்னை, மும்பை அணிகள் இடையிலான மோதல் என்றாலே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் இந்த ஆட்டம் மீதான ரசிகர்களின் ஆர்வம் எகிறி இருக்கிறது. தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், சென்னை 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), திலக் வர்மா, டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்டு, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ.
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரஹானே, டோனி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்குர், துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.
முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.