ஐபிஎல் மினி ஏலம்: டெல்லி அணியிடமிருந்து முக்கிய ஆல்-ரவுண்டரை வாங்கிய கொல்கத்தா..!
|ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணியிடமிருந்து முக்கிய ஆல்-ரவுண்டரை கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.
மும்பை,
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.
அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை அந்த அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது. அவருக்காக அந்த அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அமன் கானை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
ஷர்துல் தாக்கூரை டெல்லி அணி கடந்த சீசனில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினர். அவர் அந்த அணிக்காக 14 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டும், 120 ரன்களும் அடித்திருந்தார். கொல்கத்தா அணி ஏற்கனவே குஜராத் அணியிடம் இருந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனையும், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குர்பாஸையும் டிரேடிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.