ஐபிஎல் மினி ஏலம்: சென்னை அணி இந்த இரண்டு வீரர்களை தேர்வு செய்ய நினைக்கும் - ராபின் உத்தப்பா
|கொல்கத்தா அணி மூன்று இடங்களுக்கு மாற்று வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.
இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணி ஏலத்தில் மூன்று வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், சென்னை அணி பிராவோக்கு மாற்றாக வீரரை எடுக்க வேண்டும் எனவும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கொல்கத்த இந்த மினி ஏலத்தில் மூன்று இடங்களுக்கான மிக முக்கிய வீரர்களை எடுக்க வேண்டும். அதில் முதலில் விக்கெட் கீப்பர் குர்பாஸ்சுக்கு பதிலாக ஒரு இந்திய விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் கொல்கத்தா அணிடின் ஆடும் லெவனில் டிம் சவுதி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய இருவரையும் ஆட வைக்க வேண்டும் என நினைத்தால் அவர்கள் குர்பாஸை தான் வெளியே உட்கார வைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ரசல்லையும், சுனில் நரைனையும் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருந்து நீக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக ஆண்ட்ரே ரசலுக்கு மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். ஐபிஎல் பழைய முறையில் நடைபெற உள்ளது. அதாவது. உள்ளூர், வெளியூர் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் ஆட வேண்டும். அவ்வாறு ஆடும் போது நிறைய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஒன்று அல்லது 2 மைதானங்களில் போட்டிகள் நடைபெறாது. நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
அதில் கொல்கத்தா அணியும் ஒன்று. கொல்கத்தா உண்மையில் தொலைவில் உள்ளது. மற்ற அணிகளை விட 2 முதல் 3 ஆயிரம் கி.மீ அதிகமாக பயணிக்க வேண்டும். ஆதலால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே ரசல் உடனடியாக அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று வீரரை நீங்கள் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி தேர்வு செய்ய வேண்டும். ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் அணியில் சில இளம் வீரர்கள் உள்ளனர் ஆனால், அவர்கள் ஜெய்தேவ் உனத்கட் போல ஒரு மூத்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், சென்னை அணி பிராவோக்கு மாற்றாக ஒரு சிறந்த ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் சிறந்த மிடில் ஆர்டர் இந்திய பேட்மேனை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் பிராவோக்கு மாற்றாக சாம் கரனை குறிவைப்பார்கள் என நினைக்கிறேன். அவர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடிவர் ஆதலால் அவர்கள் சாம் கரனை நிச்சயமாக எடுக்க நினைப்பர்.
ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும் அதுவும் இந்திய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும். மனிஷ் பாண்டே போல ஒரு வீரரை சென்னை அணி எடுக்க வேண்டும். அவருக்கு ஐபிஎல் போட்டியில் ஆடிய அனுபவம் அதிகமாக உள்ளது. சென்னை அணி அனுபவம் வாய்ந்த வீரரை தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் என்பதால் மனிஷ் பாண்டே சிறந்த தேர்வாக இருப்பார்.
இந்த இரண்டு வீரர்களை தேர்வு செய்ய சென்னை அணி நிச்சயம் ஆர்வம் காட்டும். இந்த வீரர்கள் ஏலத்தில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் நிச்சயம் மாற்று வழியை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராபின் உத்தப்பா ஐபிஎல்லில் சென்னை மற்றும் கொல்கத்த அணிக்காக ஆடி கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.