ஐ.பி.எல். தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் மயங்க் யாதவ் ஆடமாட்டார் - ஜஸ்டின் லாங்கர் தகவல்
|மயங்க் யாதவுக்கு எதிர்பாராதவிதமாக முன்பு காயம் அடைந்த இடத்துக்கு அருகில் மறுபடியும் லேசான தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள டெல்லியை சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசி அசத்தியதுடன் தனது முதல் 2 ஆட்டங்களில் தலா 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
3வது ஆட்டத்தில் அவர் அடிவயிற்று பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். இதனால் சில ஆட்டங்களை தவற விட்ட அவர் லக்னோவில் கடந்த 30ந் தேதி நடந்த மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார். மயங்க் யாதவ் 4வது ஓவரில் முதல் பந்தை வீசிய நிலையில் மீண்டும் காயம் அடைந்து வெளியேறினார்.
அவருக்கு அடிவயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவரது காயம் குறித்து லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று கூறுகையில், காயத்தில் இருந்து மீண்டும் களம் திரும்பிய மயங்க் யாதவுக்கு எதிர்பாராதவிதமாக முன்பு காயம் அடைந்த இடத்துக்கு அருகில் மறுபடியும் லேசான தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
அவர் விரைவில் குணமடைந்து தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் பந்து வீச வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். எங்கள் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலும் அவர் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.