ஐ.பி.எல். போட்டி தொடர்: ஆல்-ரவுண்டர் ஜடேஜா அரிய சாதனை
|பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆல்-ரவுண்டர் ஜடேஜா, 20 ரன்களை கொடுத்து, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன் மற்றும் அசுதோஷ் சர்மா என 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், ஆல்-ரவுண்டரான ஜடேஜா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அவர், 40-க்கு கூடுதலான ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் என ஐ.பி.எல். போட்டியில் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் ஆல்-ரவுண்டருக்கான சாதனையை படைத்திருக்கிறார். இன்றைய போட்டியில், 26 பந்துகளில் 43 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவற்றில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களும் அடங்கும்.
அவர் போட்டியில் 165.38 ஸ்டிரைக் ரேட் எடுத்திருக்கிறார். 20 ரன்களை கொடுத்து, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன் மற்றும் அசுதோஷ் சர்மா என 3 விக்கெட்டுகளை அவர் எடுத்திருக்கிறார்.
இதற்கு முன், 2012-ல் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் மற்றும் 16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து முதன்முதலாக இந்த சாதனையை அடைந்துள்ளார். இதன்பின்னர் 2021-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில், 62 ரன்கள் மற்றும் 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
இந்த சாதனையை இதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் மற்றும் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வெற்றி பெற செய்தவரான ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஆகிய இருவர் செய்துள்ளனர். இந்த வரிசையில் ஜடேஜா சேர்ந்திருக்கிறார்.