ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னணி வீரர்கள் இந்தியா வருகை
|நியூசிலாந்தை சேர்ந்த டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளனர்.
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஹீரோவாக திகழ்ந்த 30 வயதான டிராவிஸ் ஹெட் நேற்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் இணைந்தார்.
2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் டிராவிஸ் ஹெட், 'இந்த ஐ.பி.எல். சீசனை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன். கணிசமாக ரன் குவித்து அணிக்கு பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு எங்களுக்கு வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் முன் எப்போது களம் காணப்போகிறோம் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று ஹெட் குறிப்பிட்டார்.
இதே போல் நியூசிலாந்தை சேர்ந்த டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளனர். அதிரடி ஆல்-ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா ஐ.பி.எல்.-ல் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
மீண்டும் முதுகுவலியால் அவதிப்படும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் ஐ.பி.எல்.-ல் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று கொல்கத்தாவுக்கு சென்ற உடன் பயிற்சியை தொடங்கினார்.
மனைவிக்கு குழந்தை பிறந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விட்டார். ஓரிரு நாட்களில் அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளார்.