ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ஷிகர் தவான்..? - அவரே வெளியிட்ட தகவல்
|தினேஷ் கார்த்திக் போன்ற சில வீரர்களைபோல் தாமும் ஐ.பி.எல். தொடரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க பேட் விருது வென்று அசத்தினார். மேலும் இந்திய அணி 2-வது இடம்பிடித்த 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் தங்க பேட் விருது வென்று அசத்தினார்.
இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து தவான் வெளியேறினார். அதிலிருந்து மீண்டு வந்த பின் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறிய அவருக்கு கில், ஜெய்ஸ்வால் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் போட்டிக்கு வந்து விட்டனர். அதனால் 2023 உலகக்கோப்பையில் கழற்றி விட்டப்பட்ட அவரின் கெரியரும் முடிந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். தொடரிலும் தொடரிலும் அற்புதமாக விளையாடிய அவர் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தவான், முதல் 4 - 5 போட்டிகளுக்கு பின் காயத்தை சந்தித்ததால் சாம் கர்ரண் பெரும்பாலான போட்டிகளில் அந்த அணியை வழி நடத்தினார். அந்த வகையில் நிலையற்ற கேப்டன்கள் தலைமையில் விளையாடிய பஞ்சாப் மொத்தம் 14 போட்டிகளில் 5 வெற்றியையும் 9 தோல்வியையும் பதிவு செய்து 9-வது இடத்தை பிடித்து வெளியேறியது.
சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடும் அவர் இந்திய அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். அதேபோல ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறும் அவரை 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் தக்க வைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் போன்ற சில வீரர்களைபோல் தாமும் ஐ.பி.எல். தொடரிலிருந்து விடைபெறும் நேரம் வந்துள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடிய பின்பே ஓய்வு பெற உள்ளதாக தவான் கூறியுள்ளார். அத்துடன் உங்கள் வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாத வதந்தி என்ன என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு ஒருமுறை இந்திய முன்னாள் மகளிரணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் தமக்கும் திருமணம் என்ற வதந்தியை மறக்க முடியாது என்று தவான் சிரித்துக் கொண்டே கூறினார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் மிதாலி ராஜுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்று கேள்விப்பட்டேன். இந்த வதந்தியை மறக்க முடியாது. இம்முறை ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய விதத்திற்காக பெருமைப்படுகிறேன். நானும் என்னுடைய கேரியரின் முடிவுக்கு வந்துள்ளேன். என்னுடைய வாழ்வில் புதிய பாகம் துவங்க உள்ளது. உங்களால் குறிப்பிட்ட வயது வரை மட்டுமே விளையாட முடியும். எனவே அது எனக்கு இன்னும் ஒன்று அல்லது 2 அல்லது சில வருடங்களாக இருக்கும். துரதிஷ்டவசமாக இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக காயமடைந்ததால் 4 - 5 போட்டிகளை தவிர்த்து என்னால் விளையாட முடியவில்லை. தற்போது குணமடைந்து வரும் நான் இன்னும் 100 சதவீதம் பிட்டாகவில்லை" என்று கூறினார்.