ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி தென்ஆப்பிரிக்கா திரும்பினார் ரபடா
|ரபடா நடப்பு ஐ.பி.எல். தொடரில் 11 ஆட்டங்களில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
கேப்டவுன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்த வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா கால் தசையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஆடவில்லை.
இந்த நிலையில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கு வசதியாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி இருக்கும் ரபடா தனது சொந்த நாடான தென்ஆப்பிரிக்காவுக்கு திரும்பி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ள ரபடா அந்த போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதியை எட்டுவதற்காக சிறப்பு டாக்டரிடம் சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார்.
அவரது உடல் தகுதி குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய டாக்டர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ரபடா நடப்பு ஐ.பி.எல். தொடரில் 11 ஆட்டங்களில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.