ஐ.பி.எல்.: வெற்றி பெற்ற பின்னர் எதிரணி வீரரை பாராட்டிய ஹர்திக் பாண்ட்யா
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
சண்டிகர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனின் 33-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் :
"உண்மையிலேயே இந்த போட்டி மிகச்சிறப்பாக இருந்தது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களின் உள்ளுணர்வும் இந்த போட்டியின்போது சோதிக்கப்பட்டது. இந்த போட்டி நடக்கும் முன்னரே நாங்கள் இந்த போட்டியில் பதட்டமான சூழ்நிலை ஏற்படலாம் அதனை சமாளிக்க தயாராகுங்கள் என்று பேசி இருந்தோம். அந்த வகையில் இந்த போட்டியின்போது ஆட்டம் கடைசி வரை பரபரப்பாக சென்றது.
ஐ.பி.எல். தொடரானது இதே போன்ற பல சுவாரசியமான போட்டிகளை வழங்கியுள்ளது. பஞ்சாப் அணி சார்பாக களமிறங்கிய இளம் அதிரடி ஆட்டக்காரரான அசுதோஷ் சர்மா விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவர் களத்திற்குள் வந்து விளையாடிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் அவர் அடிக்கும்போது பேட் மிடிலில் பட்டு பந்து பறந்து கொண்டிருந்தது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இறுதியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியை தேடித்தந்ததில் மகிழ்ச்சி" என்று கூறினார்.