ஐபிஎல்: லக்னோவிற்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அபாரவெற்றி.!
|லக்னோ அணியால் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களே எடுக்க முடிந்தது.
ஆமதாபாத்,
16வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆமதாபாத்தில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹாவும், கில்லும் களமிறங்கினர். அவர்கள் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ கேப்டன் க்ருணால் பாண்ட்யா திணறினார்.
சகா 43 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கில், 51 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 94 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கேப்டன் ஹர்திக் 25 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர்.
இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கைல் மேயர்ஸ் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், தன் பங்குக்கு 41 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ள பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தவறினர். தீபக் ஹூடா (11), ஸ்டோய்னிஸ் (4), நிக்கோலஸ் பூரன் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், போட்டி குஜராத் பக்கம் திரும்பியது.
கடைசிகட்டத்தில் குஜராத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். லக்னோ பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முயற்சித்தும், அவர்களால், இலக்கிற்கு அருகில் கூட செல்லமுடியவில்லை.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களே எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.