ஐ.பி.எல். பார்ம் பொருத்தமற்றது...ஆஸ்திரேலிய அணிக்காக அவர் அசத்துவார் - கவாஜா நம்பிக்கை
|ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். பார்ம் பொருத்தமற்றது என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
சிட்னி,
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக 20 அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் ஆஸ்திரேலியா சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே பல கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா ஐசிசி தொடரில் எப்போதுமே அபாரமாக செயல்படக்கூடிய அணியாக பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில் இம்முறை மிட்செல் மார்ஷ் தலைமையில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், வார்னர், ஸ்டோய்னிஸ் போன்ற நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கின்றனர். ஆனால் டேவிட் வார்னர் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் தடுமாற்றமான பார்மில் இருக்கின்றனர்.
அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த தொடரில் வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்த்து பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் மோசமான பார்மில் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் பார்ம் பொருத்தமற்றது என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். எனவே மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்காக அற்புதமாக விளையாடுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறுத்து அவர் பேசியது பின்வருமாறு:-
"ஐபிஎல் பார்ம் முற்றிலும் பொருத்தமற்றது. மேக்ஸ்வெல் மீண்டும் மீண்டும் தம்முடைய தரத்தை நிரூபித்தவர். நீண்ட காலமாக நன்றாக விளையாடிய எந்த வீரருக்கும் களத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அசத்த முடியாது என்பது நன்றாக தெரியும். மிடில் ஆர்டரில் நீங்கள் விளையாடும்போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும்.
ஆனால் டி20 கிரிக்கெட்டில் அது எளிதல்ல. இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல இன்னிங்ஸ் நன்றாக விளையாடினால் அவர் மீண்டும் வந்து விடுவார். எனவே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. அதற்காக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. தொடர்ந்து விளையாடி அவர் தன்னுடைய ஆட்டத்தை கண்டெடுப்பார்" என்று கூறினார்.