கிரிக்கெட்
ஐ.பி.எல்: இங்கிலாந்து வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறு எந்த பயனும் ஏற்படவில்லை - ஜெப்ரி பாய்காட்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல்: இங்கிலாந்து வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறு எந்த பயனும் ஏற்படவில்லை - ஜெப்ரி பாய்காட்

தினத்தந்தி
|
12 July 2024 11:25 AM IST

ஐ.பி.எல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறு எந்த பயனும் ஏற்படவில்லை என ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்பொது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 10ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியுடன் இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார். இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 - 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெற்றி காண்போம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதன் பின் நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் கிடைக்கும் பணத்தால் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்துவிட்டதாவும், ஐ.பி.எல் தொடரால் எங்களுடைய சராசரி டெஸ்ட் வீரர்களை பணக்காரர்கள் ஆனது தவிர இங்கிலாந்துக்கு வேறு எந்த பயனும் ஏற்படவில்லை எனவும் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து சுமாராக விளையாடியது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரால் எங்களுடைய சராசரி டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர இங்கிலாந்துக்கு வேறு எந்த பயனும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக துவங்கிய இங்கிலாந்து கடைசியில் 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டது.

கடந்த குளிர்காலத்தில் இந்தியாவில் எங்களுடைய வீரர்களில் சிலர் வேகமாக ரன்கள் அடிப்பது, ரசிகர்களை பரவசப்படுத்துவது எப்படி என்ற கருத்துக்களுடன் வெளியே வந்தனர். இவை பாராட்டத்தக்கவை. அதற்காக அவர்கள் தோல்வியை சந்தித்திருக்கக் கூடாது. ஏனெனில் தோல்வியை சந்திப்பதில் வேடிக்கை கிடையாது.

இவர்கள் ரசிகர்களைக் குஷிப்படுத்தி விட்டு தோற்கிறார்கள், மாறாக இந்தியா வெற்றி பெற்று ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறது. டெஸ்ட் போட்டி என்பது கண்காட்சி அல்ல. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் முடிவு முக்கியமல்ல என்று நம்முடைய வீரர்கள் நினைத்தால் பின்னர் அவர்கள் சர்க்கஸில் சேர்ந்து கொள்ளலாம். அங்கே தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் சிரித்து வேடிக்கையாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்