< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோவுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - சேப்பாக்கத்தில் இன்று மோதல்
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோவுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - சேப்பாக்கத்தில் இன்று மோதல்

தினத்தந்தி
|
23 April 2024 6:17 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை- லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (பெங்களூரு, குஜராத், கொல்கத்தா, மும்பைக்கு எதிராக) 3 தோல்வி (டெல்லி, ஐதராபாத், லக்னோவுக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. லக்னோ ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இதே லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சென்னை அணி எதிர்கொண்டது. அதில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது. ஆனால் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து தடுமாறுவது பின்னடைவாக உள்ளது. அவர் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை பலமடையும். இதே போல் 8-வது வரிசையில் இறங்கும் மூத்த வீரர் டோனி 42 வயதிலும் சர்வசாதாரணமாக சிக்சர்களை விரட்டுகிறார். அவர் முன்வரிசையில் ஆடினால் இன்னும் நன்றாக இருக்கும். பந்து வீச்சில் தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான் பவர்-பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும். சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் இந்த சீசனில் ஆடிய 3 ஆட்டங்களிலும் சிக்கலின்றி வெற்றி பெற்றது. அதே ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பார்க்கலாம்.

லக்னோ அணியும் 4 வெற்றி, 3 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி 177 ரன்னை இலக்காக நிர்ணயித்த போதிலும், கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டான் டி காக் அரைசதம் அடித்து லக்னோவை எளிதில் வெற்றி பெற வைத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயீன் அலி அல்லது டேரில் மிட்செல் அல்லது தீக்ஷனா, டோனி, தீபக் சாஹர், துஷர் தேஷ் பாண்டே, முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா.

லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா அல்லது தேவ்தத் படிக்கல், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொசின்கான், யாஷ் தாக்குர்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்