ஐபிஎல் கிரிக்கெட்: கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த விராட் கோலி...!
|ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
பெங்களூரு,
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். நடப்பு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய கடைசி லீக் போட்டியில் பதிவு செய்த சதத்துடன் சேர்த்து மொத்தமாக 7 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி. இதன் மூலம் கிறிஸ் கெயிலின் 'சத' சாதனையை கோலி தகர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கெயில் மொத்தம் 6 சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 639 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 53.25. இதில் 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் உட்பட விராட் கோலி விளையாடும் ஒவ்வொரும் போட்டியிலும் அவர் சாதனை படைப்பது வழக்கம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக கடந்த 2008 சீசன் முதல் நடப்பு சீசன் வரையில் 7,263 ரன்கள் குவித்துள்ளார் கோலி. அதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாகவும் அவர் உள்ளார். மொத்தம் 643 பவுண்டரிகள் விளாசி அதிக பவுண்டரி பதிவு செய்த பேட்ஸ்மேன்களில் 3-வது இடத்தில் உள்ளார். 234 சிக்ஸர்கள் விளாசி அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். 50 அரை சதங்கள் மற்றும் 7 சதங்களை கோலி இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார்.
2016 சீசனில் 4 சதங்கள், 2019 சீசனில் 1 சதம் மற்றும் 2021 சீசனில் 2 சதங்கள் என மொத்தம் 7 சதங்களை கோலி பதிவு செய்துள்ளார். குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.