ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: சென்னை, பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சி
|ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடப்பது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019, 2021-ம் ஆண்டு சீசனும் சென்னையில் இருந்து தான் தொடங்கியது.
ஐ.பி.எல். போட்டிக்கு தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொள்வதற்காக சென்னை கேப்டன் தோனி 2 வாரத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டார். தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சான்ட்னெர், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, ஷர்துல் தாக்குர், ஷிவம் துபே, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோரும் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரு அணி வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் நேற்று சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கினர். இன்றும் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
முதல் ஆட்டம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் இப்போதே எகிறியுள்ளது. ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதால், ஸ்டேடியம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் குலுங்கப்போகிறது.
இதற்கிடையே, 'ஐ.பி.எல். பேன்ஸ் பார்க்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரிய திரையில் ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக காண இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி மதுரையில் நாளையும், நாளை மறுதினமும், கோவையில் மார்ச் 30, 31-ந்தேதியும் ஐ.பி.எல். ஆட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.