< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
15 May 2024 5:51 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

கவுகாத்தி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோற்றதன் மூலம் ராஜஸ்தான் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்தது.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை தொலைத்து விட்ட பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது முந்தைய லீக் ஆட்டங்களில் சென்னை, பெங்களூரு அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டது.

ராஜஸ்தான் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான கவுகாத்தியில் இந்த சீசனில் நடைபெறும் முதலாவது ஆட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இங்கு நடந்த 2 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணி 190 ரன்களுக்கு மேல் எடுத்ததுடன் வெற்றியையும் தனதாக்கியது. எனவே வலுவான ராஜஸ்தான் அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் சாத்தியமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 16 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்