< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட்; மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
30 April 2024 5:59 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோத உள்ளன.

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. அதேவேளையில் 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ந்து தகிடுதத்தம் போடுகிறது. இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது.

மும்பை அணிக்கு எஞ்சிய 5 ஆட்டங்களும் முக்கியமானதாகும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விடும். எனவே வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் அந்த அணி களம் இறங்குகிறது.

லக்னோ அணியில் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் ஆடாத இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாகவும், அனேகமாக அவர் இன்றைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பெறுவார் என்றும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்து வீசி அச்சுறுத்தும் மயங்க் யாதவின் வருகை அந்த அணியின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தும்.

சிக்கலின்றி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்