ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
|ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு (2 முறை) டெல்லி, லக்னோ அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (சென்னை, ராஜஸ்தானிடம்) 10 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் உள்ளது. நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
அதே சமயம் பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றதும் இதில் அடங்கும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும். இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.